ஞானஸ்நானம் தோன்றிய விதம்
உண்மையில் ஞானஸ்நானம் என்பது யாது? முதலாவது அதைப் பிரசங்கித்தது யார்? அதனால் ஏற்பட்ட பலன்கள் யாவை? என்பவை குறித்து “ஞானஸ்நானம் தோன்றிய விதம்” என்கிற தலைப்பில் நாம் காண்போம். .
ஞானஸ்நானம் என்பது யாது?
“ஞானஸ்நானம்” என்ற பதமே அதனுடைய அர்த்தத்தை விளக்குகிறது. "பாப்டிஸம்" என்பது ஓர் ஆங்கில பதம் அல்ல. அது "பாப்டைஸோ” என்ற கிரேக்க பதத்திலிருந்து வந்ததாகும். “பாப்டைஸோ” என்பதற்குக் கிரேக்க மொழியில், ஒரு பொருளை, நீர் அல்லது திரவ மட்டத்தின் கீழ் அமிழ்த்தி, பின்பு அதனை வெளியே எடுப்பது என்று அர்த்தமாகும். யோவான்ஸ்நானன் காலம் வரை பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஞானஸ்நானம் கொடுக்கப் பட்டதாக யாதொரு சந்தர்ப்பத்தையும் நாம் காண்கிறதில்லை. இது மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இருக்கவுமில்லை; ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் போதிக்கப்படவுமில்லை. ஆனால் இதற்கு ஒப்பனையான ஒரு காரியத்தை அங்கே நாம் காண்கிறோம். கர்த்தருக்கு ஊழியஞ்செய்யும்படி ஆசாரியர்கள் ஆசரிப்புக்கூடாரத்திற்குள் பிரவேசிப்பதற்கு முன் அவர்களைத் தண்ணிரில் கழுவி (தண்ணீரில் முழுக்கி அல்ல), அவர்களுக்கு வஸ்திரம் தரித்து, அவர்களை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டார் (யாத்திராகமம் 29:4-7).
ஞானஸ்நானத்தைக் குறித்து முதலாவது பிரசங்கித்தது யார்?
“இவர் (இயேசுகிறிஸ்து) வெளிப்படுவதற்கு முன்னே மனந்திரும்புதலுக்கேற்ற ஞானஸ்நானத்தைக் குறித்து யோவான் இஸ்ரவேலர் யாவருக்கும் பிரசங்கித்தான்” என்று வேதாகமம் சொல்லுகிறது (அப்போஸ்தலர் 13:24). ஞானஸ்நானம் கொடுக்கும்படி, தான் தேவனிடத்திலிருந்து நேரடியாகக் கட்டளை பெற்றதாக யோவான்ஸ்நானன் கூறுகிறான் (யோவான் 1:33).
யோவான்ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம் :
யோவான்ஸ்நானன் கிறிஸ்துவுக்காக ஜனத்தை ஆயத்தப்படுத்தும்படி அவருக்கு முன் வந்த ஒரு முன்னோடி மட்டுமே. மனந்திரும்புதலைக் குறித்துப் பிரசங்கிப்பதும் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு மெய்யாகவே மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதும், அவர்களைப் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் அபிஷேகம்பண்ணப்போகிறவராகிய கிறிஸ்துவை அவர்களுக்குப் பிரசங்கிப்பதுமே அவனுடைய பிரதான ஊழியமாய் இருந்தது (மத்தேயு3:6,11). அவன் தேவாலயத்திற்கடுத்த விஷயங்களிலும், அப்போதிருந்த ஆசாரியத்துவத்திலும் அவர்களுடைய உபதேசங்களிலும் தலையிடாமல் பாவத்தின் கொடூரத்தையும் அதன் சம்பளத்தையும் குறித்தே வலியுறுத்தி எச்சரித்தான். கிறிஸ்துவின் மேன்மையான ஜீவியத்தோடு ஒப்பிடுகையில் தன் ஜீவியம் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்பதையும், தான் கொடுக்கும் ஞானஸ்நானம் 'மனந்திரும்புதல்' என்னும் கிறிஸ்துவின் ஆரம்ப உபதேசம் ஒன்றுடன் மட்டுமே சம்பந்தமுள்ளதாயிருக்கிறது என்பதையும் தன்மூலம் குணப்பட்டவர்களுக்கு அவன் தெளிவாக்கினான் (மத்தேயு3:11).
யோவான்ஸ்நானன் மூலம் குணப்பட்டவர்கள்:
யோவான்ஸ்நானன் ஒருக்காலும் பிள்ளைகளுக்கு ஞானஸ்நானம் கொடுத்ததில்லை. அதுமட்டுமல்ல, வயது வந்தவர்களுங்கூட பாவத்தின்மேல் நாட்டமுள்ளவர்களாய் இருப்பதாக அவன் கண்டால், அவர்களுக்கு அவன் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை. தேவனை விட்டும் தேவனுடைய வசனத்தை விட்டும் வழுவிப்போய் தங்கள் தரத்திலே குறைந்து போன பரிசேயரையும் சதுசேயரையும் அவன் கண்டபோது அவர்களை 'விரியன் பாம்புக்குட்டிகளே' என்று அழைத்து, 'மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்' எனக் கட்டளையிட்டான் (மத்தேயு3:7,8). ஞானஸ்நானத்தைத் தன்னுடைய ஊழியத்தை விரிவுபடுத்துவதற்கோ அல்லது தன்னைப் பின்பற்றுகிறவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ அவன் பயன்படுத்தவில்லை.
யோவான்ஸ்நானன் ஞானஸ்நானம் கொடுத்த விதம் :
ஒரு குவளையிலிருந்தோ அல்லது ஒரு பாத்திரத்திலிருந்தோ தண்ணீரை எடுத்துத் தெளிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அவன் யோர்தான் நதியில் மெய்யாகவே மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். சரீரத்தை முழுவதுமாய் நீருக்குள் அமிழ்த்துவதற்குப் போதிய ஆழமில்லாத இடங்களை அவன் தவிர்த்து நதியின் ஆழமான பகுதிகளைத் தெரிந்து கொண்டான். சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங் கொடுத்து வந்தான் என நாம் வாசிக்கிறோம் (யோவான் 3:23). இது தண்ணீர் மட்டத்தின் கீழ் அமிழ்த்துவது என்று அர்த்தம் கொள்ளும் 'பாப்டைஸோ' என்னும் பதத்திற்கு ஏற்றவாறு கொடுக்கப்பட்ட ஞானஸ்நானமாக இருக்கிறது.
இயேசுகிறிஸ்து பெற்றுக்கொண்ட ஞானஸ்நானம்:
இயேசுகிறிஸ்து பாவமில்லாதவர்; தேவனுடைய மாசற்ற குமாரன். அவர் மனஸ்தாபப்படுவதற்கு அல்லது மனந்திரும்புவதற்கு ஏதுவாய் அவரிடம் எதுவுமில்லை. அப்படியாயின், அவர் ஏன் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்? அவருடைய சொந்த வார்த்தைகளின்படி, அது தேவனுடைய நீதியை நிறைவேற்றுவதற்காகும். (மத்தேயு 3:15).
அதுமாத்திரமல்ல, அவரைப் பின்பற்றுகிறவர்ளாகிய 'நமக்கு (அவர்) உண்டுபண்ணின' 'புதிதும் ஜீவனுமான மார்க்கத்தில்' நாம் அவரைப் பின்பற்றும்படி கருத்தாய் நமக்கு ஒரு முன்மாதிரியை வைக்க வேண்டியதாயிருந்தது (எபிரெயர் 10:19). 'அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்' (யோவான் 17:19) என்றும், 'நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்' (யோவான் 13:15) என்றும் அவர் சொல்லக் கூடியவராயிருந்தார். 'இதற்காக நீங்கள் அழைக்கப்பட்டுமிருக்கிறீர்கள்; ஏனெனில், கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின் வைத்துப் போனார். அவர் பாவஞ்செய்யவில்லை, அவருடைய வாயிலே வஞ்சனை காணப்படவுமில்லை' என்று அப். பேதுரு கூறுகிறார் (ஐ பேதுரு 2:21,22).
ஞானஸ்நானத்தைக் குறித்த விஷயத்தில் கர்த்தராகிய இயேசு நமக்கு வைத்துப்போன மாதிரி என்ன?
1. கர்த்தராகிய இயேசு வயது வந்தவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஞானஸ்நானத்தைப் பெற்றுக்கொண்டார். குழந்தையாயிருந்தபோது மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளும்படி (மற்ற குழந்தைகளைப் போல) அவர் விருத்தசேதனம்பண்ணப் பட்டிருந்தாலும் குழந்தையாயிருந்தபோது அவருக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்படவில்லை.
2. கர்த்தராகிய இயேசுவின் ஞானஸ்நானம் தெளித்தல் மூலமாக அல்லாமல் முழுக்கிக் கொடுக்கப்பட்டதேயாகும். அவர் 'யோர்தான் நதியில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். அவர் ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, வானம் திறக்கப்பட்டதையும், ... கண்டார்' (மாற்கு 1:9,10). கர்த்தராகிய இயேசு தண்ணீரில் முழுகி ஞானஸ்நானம் பெறாமல், அவர்மேல் தண்ணீர் தெளிக்கப்பட்டிருக்குமேயாயின், ஒரு நதியை நாடிச் செல்லவும் தண்ணீருக்குள் இறங்கவும் வேண்டிய அவசியம் இருந்திராதே.
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் நமக்குக் காண்பிக்கப்பட்ட மாதிரியின் மூலம் குழந்தை ஞானஸ்நானத்தையோ தெளித்தல் ஞானஸ்நானத்தையோ நாம் ஆதரிக்கக் கூடாது என்று அறிந்து கொள்ளுகிறோம்.
யோவான்ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானத்தின் பலன்கள் யாவை?
1. யோவான்ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம் அவனுடைய உபதேசங்களுக்கும் யூத மார்க்கத்தின் போதகர்களுடைய உபதேசங்களுக்கும் இடையே புதிய பிரிவினையையும் முரண்பாடான கடுமையான தர்க்கத்தையும் கொண்டுவந்தது. அவர்கள், 'நீர் கிறிஸ்துவுமல்ல, எலியாவுமல்ல, தீர்க்கதரிசியானவருமல்லவென்றால், ஏன் ஞானஸ்நானங் கொடுக்கிறீர்' என்று அவனுடைய அதிகாரத்தைக் குறித்து வினவினர் (யோவான் 1:25). அவர்களுக்கு ஆவிக்குரிய தரிசனம் கிடையாது. தேவனுடைய சிந்தையை அவர்களால் அறிந்து கொள்ளவும் முடியவில்லை. ஞானஸ்நானத்தைத் தேவனுடைய கட்டளையாக அவர்களால் ஏற்றுக்கொள்ளவும் முடியவில்லை. 'பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுமோ அவனாலே ஞானஸ்நானம் பெறாமல் தங்களுக்குக் கேடுண்டாகத் தேவனுடைய ஆலோசனையைத் தள்ளிவிட்டார்கள்' என வேதாகமம் கூறுகிறது (லூக்கா 7:30). ஞானஸ்நானம் எடுப்பதற்கு மிகுந்த தாழ்மை தேவை.
2. யோவான்ஸ்நானன் கொடுத்த ஞானஸ்நானம் அவர்களுடைய யூதசபைகளில் பிரிவினைகளை உண்டாக்கிற்று. 'யோவானுடைய உபதேசத்தைக் கேட்ட ஆயக்காரர் முதலான சகல ஜனங்களும் அவனாலே ஞானஸ்நானம் பெற்று, தேவன் நீதிபரர் என்று அறிக்கையிட்டார்கள்' (லூக்கா 7:29) என்ற வசனத்திலிருந்து யோவான்ஸ்நானனுடைய ஞானஸ்நானத்தை எதிர்த்த தலைவர்கள், அநேகரைச் சபைக்குப் புறம்பாக்கியிருந்திருக்கக் கூடும் என்று தெளிவாய் விளங்குகிறது.
இக்காலத்திலும் சரியான ஞானஸ்நானத்தைக் குறித்து உணர்த்தப் படுகிறவர்களில் சிலர் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியத் தீர்மானிக்கிறதில்லை. அவர்கள் தேவனால் நீதிமான்களாக்கப்படுவதையும் அவரால் வருகிற கனத்தையும் விட தவறான பாரம்பரியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதின்மூலம் தங்கள் மதகுருக்களால் நீதிமான்களாக எண்ணப்படுவதையும் அவர்களால் வரும் கனத்தையுமே தேடுகிறார்கள். 'தேவனாலே மாத்திரம் வருகிற மகிமையைத் தேடாமல், ஒருவராலொருவர் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிற நீங்கள் எப்படி விசுவாசிப்பீர்கள்? என்று கர்த்தராகிய இயேசு சொன்னார் (யோவான் 5:44).
தேவன் நம்மை நீதிமான்களாக்கி நம்மைப் பெலப்படுத்தும்படியாக உபத்திரவங்களின் மத்தியிலும் தேவனுடைய வசனத்திற்குக் கீழ்ப்படிந்து சுத்த மனச்சாட்சியோடு ஜீவிப்பதே சாலச் சிறந்தது.