புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானம்

பெந்தெகொஸ்தே நாள் முதல், அதாவது, மேல் வீட்டறையில் பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ளுதல் மூலமாய்ப் புதிய ஏற்பாட்டுச் சபையானது பிறந்ததுமுதல்,யோவானுடைய ஞானஸ்நானத்தின் இடத்தை, இயேசுகிறிஸ்துவினால் நேரடியாய்க் கொடுக்கப்பட்ட கட்டளையாகிய புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானமானது எடுத்துக்கொண்டது. யோவான்ஸ்நானன் பிரசங்கித்த மனந்திரும்புதலின் உபதேசத்துடன் பரிசுத்த அப்போஸ்தலருக்குப் பரிசுத்த ஆவியால் வெளிப்படுத்தப்பட்ட இன்னும் அநேக ஆவிக்குரிய பிரமாணங்களும் ஆசீர்வாதங்களுங்கூட சேர்க்கப்பட்டன. “இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள். சத்தியஆவியாகிய அவர்வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்” (யோவான் 16:12,13).

யோவான்ஸ்நானனுக்கு வெளிப்படுத்தப்படாத புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானத்தின் மேன்மையான முக்கியத்துவங்கள் சிலவற்றைக் குறித்து நாம் காண்போம்.

1. தேவனுடைய (ஆவிக்குரிய) ராஜ்யத்துக்குள் பிரவேசிக்க புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானமானது ஒரு படியாயிருக்கிறது. “இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்” என்றார் (யோவான் 3:5).

2. தண்ணீர் ஞானஸ்நானத்தில் நாம் மனுஷனில் இயற்கையாகவே இருந்து வரும் பாவ சுபாவத்துக்கு மரிக்கிறோம். “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?” (ரோமர் 6:2,3).

3. இது பழைய மனுஷன் முழுவதும் தன் பாவசரீரத்தோடு அடக்கம் பண்ணப்படுவதைக் காட்டுகிறது. ‘புதிதான ஜீவன்’ உள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படி, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் ஜீவனில் பங்குபெறும் நம்பிக்கையுடன் நாம் (இதனைப் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தில் பெற்றுக்கொள்ளுகிறோம்) கிறிஸ்துவின் மரணத்தில் பங்கு பெறுகிறோம்.

‘மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம். ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலிலும் (‘உயிர்த்தெழுதலின் சாயல்’ என்பது மூலபாஷையில் இல்லை) இணைக்கப்பட்டிருப்போம். நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்து போகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம்” (ரோமர் 6:4-6).

4. ஜெயஜீவியம் இதிலிருந்து ஆரம்பமாகிறது. “பாவத்துக்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?”; “மரித்தவன் பாவத்துக்கு நீங்கி விடுதலையாக்கப்பட்டிருக்கிறானே”; “மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து இனி மரிப்பதில்லையென்று அறிந்திருக்கிறோம்; மரணம் இனி அவரை ஆண்டுகொள்வதில்லை” (ரோமரஂ 6:2,3,7,9).

5. இதினால் நாம் பாவத்திற்கு மரிப்பது மட்டுமல்ல, நமக்குள் கிரியைசெய்யும் பாவத்தின் முரட்டாட்டமான சுபாவத்தினின்று இரட்சிக்கப்படுகிறோம், அல்லது விடுதலையாக்கப்படுகிறோம். ஆகையால் இது ‘இரட்சிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. (மாற்கு 16:16). கலகமுண்டாக்கும் இப்பாவசுபாவமானது, இஸ்ரவேல் புத்திரர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தபொழுது அவர்களைப் பின்தொடர்ந்ததான பார்வோனின் சேனைகளுக்கு ஒப்பாயிருக்கிறது.

‘இப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் எவைகளை அறிய வேண்டுமென்றிருக்கிறேனென்றால்; நம்முடைய பிதாக்களெல்லாரும் மேகத்துக்குக் கீழாயிருந்தார்கள், எல்லாரும் சமுத்திரத்தின் வழியாய் நடந்து வந்தார்கள். எல்லாரும் மோசேக்குள்ளாக மேகத்தினாலும் சமுத்திரத்தினாலும் ஞானஸ்நானம்பண்ணப்பட்டார்கள்” (I கொரிந்தியர் 10:1,2).

6. பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இது ஒரு ஆயத்தப்படியாய் இருக்கிறது. “பேதுரு அவர்களை நோக்கி: நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” (அப்போஸ்தலர் 2:38).

7. நம்முடைய சரீரம் எழுத்தின்படி உயிர்த்தெழுவதற்கு அல்லது கிறிஸ்துவின் வருகையிலே நமது சரீரங்கள் எடுத்துக் கொள்ளப்படுவதற்கு இது முக்கியமான ஒரு படியாயிருக்கிறது.
“அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலிலும் இணைக்கப்பட்டிருப்போம்” (ரோமரஂ 6:5).

ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்குரிய தகுதிகள்:

தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, இருதயங்கள் கர்த்தராகிய இயேசுவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறது என்ற நிச்சயத்தோடு, தேவனிடத்திலிருந்து ஒரு உண்மையான அனுபவத்தைப் பெற்றுக்கொண்ட, மறுபடியும் பிறந்த தேவனுடைய பிள்ளைகள் மட்டுமே ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டதாக புதிய ஏற்பாட்டு வேதவாக்கியங்கள் வெளிப்படுத்துகின்றன.

  • “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” (மாற்கு 16:16).
  • “மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:38).
  • “அப்பொழுது, எருசலேம் நகரத்தாரும், ... அவனிடத்திற்குப் போய், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்” (மத்தேயு 3:5,6).
  • இயேசுவின் சீடரானவர்கள் (மத்தேயு 28:19).
  • இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவர்கள் (அப்போஸ்தலர் 8:36-38).
  • இயேசுகிறிஸ்துவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து வசனங்களை சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் (அப்போஸ்தலர் 2:41; 16:31-33).
  • இயேசுவை ஏற்றுக்கொண்டு பரிசுத்த ஆவியின் நிறைவைப் பெற்றவர்கள் (அப்போஸ்தலர் 10:47,48).

ஜீவியத்தில் பூரண மாற்றம் ஏற்படவேண்டும் அல்லது ஜீவியம் புதுப்பிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு விசுவாசித்தல், மனந்திரும்புதல், பாவங்களை அறிக்கையிடுதல் இவையெல்லாம் ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறக்கும் அனுபவத்துக்கு வழிநடத்துகின்றன என்பதைக் கவனிக்கவும்.

அப்பொல்லோவின் மூலம் குணப்பட்டவரஂகளுக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதின் காரணம்:

அப்போஸ்தலருடைய நடபடிகளில் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியை நாம் காண்கிறோம். யோவான் கொடுத்த (முழுக்கு) ஞானஸ்நானத்தைப் பெற்றிருந்தவர்களாகிய சில விசுவாசிகளுக்கு (‘சீஷர்கள்’ என்று அழைக்கப்பட்டவரஂகளுக்கு) அப்.பவுல் மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்ததாக நாம் வாசிக்கிறோம். அதைக்குறித்து வேதாகமத்தில் அப்போஸ்தலர் 19:1-7 வசனங்களில் படித்து அறிந்து கொள்ளலாம்.

“அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான். அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். இதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார். அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள். அந்த மனுஷரெல்லாரும் ஏறக்குறையப் பன்னிரண்டு பேராயிருந்தார்கள்” (அப்போஸ்தலர் 19:1-7).

இப்பகுதியிலிருந்து இவர்கள் அப்பொல்லோவின் மூலம் மனந்திரும்பியவர்கள் என்பது தெளிவாகிறது. “சாதுரியவானும் வேதாகமங்களில் வல்லவனுமான அப்பொல்லோ என்னும் பேர்கொண்ட ஒரு யுதன்.. கர்த்தருடைய மார்க்கத்திலே உபதேசிக்கப்பட்டு, யோவான் கொடுத்த ஸ்நானத்தைமாத்திரம் அறிந்தவனாயிருந்து, ஆவியில் அனலுள்ளவனாய்க்கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதகம்பண்ணிக்கொண்டு வந்தான்” என்று இந்த அப்பொல்லோவைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது (அப்போஸ்தலர் 18:24,25). இவன் தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்தாவியின் அபிஷேகம், இன்னும் புதிய ஏற்பாட்டுச் சபையின் மேன்மையான போதனைகள் ஆகியவைகளைப் பற்றிய ஆழமான சத்தியங்களைக் குறித்து அறியாதவனாயிருந்தான். இவன் கர்த்தருக்கு அடுத்தவைகளைத் திட்டமாய்ப் போதித்து வந்ததை அப். பவுலோடு சேர்ந்து ஊழியஞ்செய்த ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் கண்டபோது அவனைச் சேரஂத்துக்கொண்டு, தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய் அவனுக்கு விவரித்துக் காண்பித்தார்கள் (அப்போஸ்தலர் 18:26).

அந்தப் பன்னிரண்டு சீஷர்களுக்கும் மறுபடியும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதன் காரணத்தை இங்கே நாம் காணலாம். மனந்திரும்புதலுக்கென்று கொடுக்கப்படும் யோவானுடைய ஞானஸ்நானத்தை மாத்திரம் அவர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களுக்கு ஆழமான சத்தியங்களை அப்பொல்லோ போதித்திருந்திருக்க முடியாது. ஏனெனில், அவனுக்கே தேவனுடைய வழி அதிக திட்டமாய்ப் போதிக்கப்பட வேண்டியதாயிருந்தது. ஆகவே, புதிய ஏற்பாட்டுச் சபையின் தண்ணீர் ஞானஸ்நானம், பரிசுத்த ஆவியின் அபிஷேகம் போன்ற உபதேசங்களைப் பற்றிப் புதிதாய் வெளிப்படுத்தப்பட்ட புதிய ஏற்பாட்டுச் சத்தியங்களை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதை விளங்கிக்கொள்கிறோம். அப். பவுல் அவர்களைப் பார்த்து, “நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?” என்று கேட்டபோது, அவர்கள் ‘இல்லை’ என்று மாறுத்தரம் கொடுத்தனர். இதிலிருந்து யோவான்ஸ்நானன் மனந்திரும்புதலுக்கென்று மட்டும் ஞானஸ்நானம் கொடுத்தான் என்றும், புதிய ஏற்பாட்டு நியமம் தொடங்கிய பெந்தெகொஸ்தே நாளிலிருந்து அது செல்லாமற் போயிற்று என்றும் அப். பவுல் தெளிவாய் அவர்களுக்குப் போதித்திருந்திருக்க வேண்டும் என்று நாம் விளங்கிக்கொள்ளலாம். ஏனெனில் அந்த நாளில் ஞானஸ்நானமானது பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள ஆயத்தப்படுத்தும் ஒரு படியாகவும் இருக்கிறது என்னும் சத்தியமும், இன்னும் இதைப்போன்றவேறு அநேக தெய்வீக சத்தியங்களும், தண்ணீர் ஞானஸ்நானத்தோடு சேர்த்துக்கொள்ளப்பட்டன. அவர்கள் இரண்டாம்முறை ஞானஸ்நானம் பெற்றுக்கொண்ட மாத்திரத்தில் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டார்கள் என்ற உண்மையானது, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானம் ஒரு படியாகவும் இருக்கிறது என்னும் சத்தியத்தை உறுதிப்படுத்துகிறது.

பரிசுத்தாவியின் அபிஷேகத்தைப் பற்றிய “தேவனுடைய மார்க்கத்தை அதிக திட்டமாய்” அறியாதவனாய் இருந்த அப்பொல்லோவைப் போல சத்தியத்தை ஒரு எல்லைக்குட்பட்ட அளவில் மட்டும் அறிந்திருந்து அதைப் பிரசங்கிக்கிற அநேக சுவிசேஷ சபைகள் இன்றைக்கு முழு உலகத்திலும் உள்ளன. அவர்கள் தங்கள் மூலம் குணப்பட்டவர்களுக்கு, ஞானஸ்நானமானது ஒரு ஆழமான ஜீவியத்துக்கு வழிநடத்தக்கூடியது என அதன் முக்கியத்துவத்தை உணர்த்திக் காண்பியாமல் வெறும் மனந்திரும்புதலுக்குரிய ஞானஸ்நானத்தை மட்டும் போதிக்கிறார்கள். அப்.பேதுரு பெந்தெகொஸ்தே நாளில் பிரசங்கித்தபடி பரிசுத்தாவியைப் பெற்றுக்கொள்ள தண்ணீர் ஞானஸ்நானம் ஒரு படியாகவும் இருக்கிறது (அப்போஸ்தலர் 2:38) என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுடைய விஷயத்தில், புதிய ஏற்பாட்டு ஞானஸ்நானத்தின் மேன்மைகளையும், விசேஷமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பற்றிய சத்தியத்தையும் அனுபவமாக்கிக்கொள்ள, அவர்கள் மறுபடியும் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வது சாலச் சிறந்தது.

யார் ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும்?

யார் ஞானஸ்நானம் கொடுக்கலாம் அல்லது கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்று தன்னை அழைத்துக் கொள்ளுகிற எவரும் ஞானஸ்நானம் கொடுக்கலாமா என்பது அடுத்த கேள்வி.

பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்தாவி ஊற்றப்பட்டதுடன் புதிய ஏற்பாட்டுச் சபை ஆரம்பமானது என்பது அநேக சபைகள் பொதுவாக விசுவாசிப்பதும் யாவரும் அறிந்ததுமான உண்மையாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசு தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு, “நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் ... பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள்” என்று கட்டளையிட்டார் (அப்போஸ்தலர் 1:4,5). அதன்பின் சபையானது பரிசுத்த ஆவியினால் நிறைந்த அவருடைய ஊழியக்காரரால் நடத்தப்பட்டது. அப். பவுல் இதை ‘ஆவிக்குரிய ஊழியம்’ என்று அழைக்கிறார் (II கொரிந்தியர் 3:8). புதிய ஏற்பாட்டு ஊழியர்களைக் குறித்து, அவர்கள் எழுத்தின்படி, அதாவது நியாயப்பிரமாணத்தின்படியல்லாமல் ஆவிக்குரிய, புது உடன்படிக்கையின் ‘தகுதியுள்ள’ ஊழியர்கள் என்று அவர் கூறுகிறார் (II கொரிந்தியர் 3:6). “நசரேயனாகிய இயேசுவைத் தேவன் பரிசுத்தஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மை செய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்” என்று கர்த்தராகிய இயேசுவைக் குறித்துக் கூறப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் 10:38). பெந்தெகொஸ்தே நாளுக்கு முன்பேயுள்ள அப்போஸ்தலரது ஊழியத்திற்கும், அதற்குப்பின் அவர்கள் செய்த ஊழியத்திற்கும் ஒரு வித்தியாசம் இருந்தது. பெந்தெகொஸ்தே நாளுக்கு முன் பரிசுத்தாவியானவர் அவர்கள் உடன் இருந்தார். ஆனால் பெந்தெகொஸ்தே நாளுக்குப் பின் அவர், அவர்களுக்குள் இருந்தார். “அவர் (பரிசுத்த ஆவியானவர்) உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்” [இருக்கப் போவதால் (Sர்all be)] என்று கர்த்தராகிய இயேசு கூறினார் (யோவான் 14:17).

பழைய ஏற்பாட்டு ஆசாரியர்கள் கர்த்தருக்கு ஊழியம் செய்யும்படி ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும் முன் பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணப்பட்டார்கள் (யாத்திராகமம் 30:30). அதுபோன்றே புதிய ஏற்பாட்டு ஊழியரும் முதல் நூற்றாண்டு அப்போஸ்தலரைப்போல பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணப்பட்டிருக்க வேண்டும்.

பெந்தெகொஸ்தே நாளுக்கு முன் அப்போஸ்தலர் எவ்விதம் ஊழியம் செய்தார்களோ அதே நிலவரத்தில்தான் அப்பொல்லோ கரஂத்தருக்குச் சேவை செய்துவந்தான். பரிசுத்த ஆவியானவர் அவனோடு இருந்தார்; ஆனால் அவனுக்குள் இருக்கவில்லை. பரிசுத்த ஆவியினால் அபிஷேகம்பண்ணப்பட்ட ஊழியத்தைப் பெற்ற அப்.பவுல், எபேசுவிலே அப்பொல்லோவினால் குணப்பட்டவர்களுக்கு மறுபடியும் ஞானஸ்நானம் கொடுத்ததற்கு அது இன்னொரு காரணமாகும் (அப்போஸ்தலர் 19:5). ஆதலால், அந்நியபாஷை அடையாளத்துடன் பரிசுத்த ஆவியைப் பெற்ற (அப்போஸ்தலர் 2:4), கிறிஸ்துவின் ஊழியரால் மட்டுமே ஞானஸ்நானம் கொடுக்கப்பட வேண்டும்.

ஞானஸ்நானம் எடுப்பதின்மூலம் நாம் பல காரியங்களை நிறைவேற்றுகிறோம்:

  • இயேசுகிறிஸ்துவின் மரணத்துடன் இணைத்துக்கொள்கிறோம் (ரோமர் 6:3).
  • இயேசுகிறிஸ்துவின் அடக்கத்துடன் நம்மை ஐக்கியப்படுத்துகிறோம் (ரோமர் 6:4; கொலோசெயர் 2:12).
  • அவருடைய உயிர்த்தெழுதலுடன் நம்மை சம்பந்தப்படுத்துகிறோம் (ரோமர் 6:4; கொலோசெயர் 2:12).
  • நாம் தேவனுடன் உடன்படிக்கை செய்துகொள்கிறோம் (I பேதுரு 3:21).
  • தேவன் நீதிபரர் என்று அறிக்கையிடுகிறோம் (லூக்கா 7:29).
  • தேவனுடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்கிறோம் (லூக்கா 7:30).
  • தேவனுடைய நீதியை நிறைவேற்றுகிறோம் (மத்தேயு 3:15).
  • இயேசுகிறிஸ்துவை தரித்துக்கொள்கிறோம் (கலாத்தியர் 3:27).