குழந்தை ஞானஸ்நானம்
குழந்தை ஞானஸ்நானத்தையோ அல்லது தெளிப்பு ஞானஸ்நானத்தையோ அங்கீகரிக்க புதிய ஏற்பாடு முழுவதிலும் ஒரு வசனமாகிலுமில்லை. இப்படிக் கூறுவது சிலருக்கு ஆச்சரியமாயிருப்பினும், அது உண்மையாயிருக்கிறது. கர்த்தராகிய இயேசுவோ அல்லது அப்போஸ்தலரோ இவ்வித ஞானஸ்நானத்தை ஆதரிக்கவில்லை. சிலர் குழந்தை ஞானஸ்நானத்தை ஆதரிப்பதற்கு மத்தேயு 19:13-15-ஐ மேற்கோளாகக் காட்டுகின்றவர்களாயிருக்கலாம். அவ்வசனங்களைக் கீழே காணலாம்:
“அப்பொழுது, சிறு பிள்ளைகளின் மேல் அவர் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; கொண்டு வந்தவர்களைச் சீஷர்கள் அதட்டினார்கள். இயேசுவோ: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொல்லி, அவர்கள்மேல் கைகளை வைத்து, பின்பு அவ்விடம்விட்டுப் புறப்பட்டுப் போனார்”.
இவ்வசனங்களிலிருந்து பின்வரும் உண்மைகள் தெளிவாய் விளங்குகின்றன:
1. அவர்கள் சிறுபிள்ளைகளை அவரிடத்தில் கொண்டு வந்தது, கர்த்தராகிய இயேசு அவர்கள் மேல் கைகளை வைத்து ஜெபம் பண்ணும்படியாகவே அல்லாமல் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படியாக அல்ல.
2. கர்த்தராகிய இயேசு அவர்கள் மேல் கைகளை வைத்தாரேயன்றி அவர்களுக்கு அவர் ஞானஸ்நானம் கொடுக்கவுமில்லை; அவர்கள்மேல் தண்ணீரைத் தெளிக்கவுமில்லை.
3. கர்த்தராகிய இயேசு கூறிய சில குறிப்பிடத்தக்க வார்த்தைகளைக் கவனியுங்கள். பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று கூறியதின் மூலமாக பிள்ளைகள் களங்கமற்ற நிலைமையில் இருக்கிறார்கள் என்பதும், எனவே அவர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் அங்கீகரிக்கப்படத்தக்கவர்கள் என்பதும் தெளிவாகிறது. கர்த்தாகிய இயேசு அவர்கள் மேல் கைகளை வைத்தது அவர்கள் மேல் தண்ணீரைத் தெளித்ததைக் காண்பிக்கிறது என்று சிலர் தர்க்கம் செய்யலாம். ஆனால் அவர்கள் மேல் கைகளை வைக்கும் முன்னதாகவே பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று அவர் கூறியதிலிருந்து அவர்களுக்கு ஞானஸ்நானம் அவசியமில்லை என்பது தெளிவாய் விளங்குகிறது. அப்படியாயின் மற்றெந்த தலைமுறையிலும் உள்ள குழந்தைகளுக்கும் ஞானஸ்நானம் ஒருபோதும் அவசியம் அல்ல.
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்வதற்கு மூன்று முக்கியமான நிபந்தனைகள்:
ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள விரும்பும் எவரும் குறைந்தது மூன்று நிபந்தனைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
முதலாவது, அவர்கள் கிறிஸ்துவிலும் அவருடைய சுவிசேஷத்திலும் விசுவாசம் வைக்க வேண்டும்: “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” (மாற்கு 16:16).
இரண்டாவதாக, அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட வேண்டும்: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள்” (அப்போஸ்தலர் 2:38).
மூன்றாவதாக, அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட வேண்டும்: “தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, யோர்தான் நதியில் அவனால் ஞானஸ்நானம் பெற்றார்கள்” (மத்தேயு 3:6).
குழந்தைகள் இம்மூன்று நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய முடியுமா? அவர்கள் கிறிஸ்துவையோ அல்லது சுவிசேஷத்தையோ விசுவாசிப்பதற்கும், ஞானஸ்நான சத்தியத்தைக் கிரகித்துக்கொள்ளவும் தங்கள் மனோசக்தியையும் ஆவிக்குரிய அறிவையும் உபயோகிக்கக்கூடிய நிலவரத்தில் இருக்கிறார்களா? அவர்கள் தங்கள் மனச்சாட்சியின் உதவியைக் கொண்டு தவறானவற்றினின்று சரியானவற்றையும், தீமையானவற்றினின்று நன்மையானவற்றையும் பகுத்தறியத்தக்க அளவுக்கு தங்களுடைய அறியாமையின் நிலைக்கு அப்பால் வளர்ந்திருக்கிறார்களா? அவர்கள் மனந்திரும்பத்தக்கதாய்ப் பாவத்தைக் குறித்து உணர்த்துவிக்கப்படக் கூடுமா? அவர்கள் எதை அறிக்கை செய்ய வேண்டும்? அவர்களால் எப்படி அறிக்கை செய்ய முடியும்? பரலோக ராஜ்யம் ‘அப்படிப்பட்டவர்களுடையது’ என்று கர்த்தர் சொன்னபோது அவருடைய ஆசீர்வாதங்களுக்குத் தகுதியாய் இருக்கும் அளவுக்கு அவர்கள் களங்கமற்ற நிலைமையில் இருக்கிறார்களல்லவா? அங்ஙனமாயின், குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது சரியானது அல்ல என்று நாம் வேத வசனங்கள் மூலம் அறிந்து கொள்கிறோம்.